100ஆவது நாள் செயல் முனைவின் இறுதி நாள் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் முன்னெடுப்பு (Videos)
வடக்கு - கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி "100 நாட்கள் செயல்முனைவு" எனும் தொணிப்பொருளின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதி போராட்டம் இன்று இடம்பெற்றது.
இந்த கவனயீ்ர்ப்பு போராட்டத்தின் இறுதி நாளான இன்று (08.11.2022) வடக்கு - கிழக்கில் காலை 10.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
கிளிநொச்சியில்...
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் பணிப்பாளர் வாசுகி வல்லிபுரம் தலைமையில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு, கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதன்போது, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
செய்தி: யது பாஸ்கர்
வவுனியாவில்...
வவுனியாவிலும் போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துக எனும் தொனிப்பொருளில் பாதாகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த இறுதி நாள் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், தியாகராஜா மற்றும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி: பாலநாதன் சதீஸ்
திருகோணமலையில்...
திருகோணமலை - முற்றவெளி மைதானத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு போராட்ட நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது தமது கோரிக்கை நிறைவேற வேண்டி பலூன்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.
இதில் தமிழ், முஸ்லிம் மக்கள் என சுமார் 600பேர் அளவில் கலந்துக் கொண்டிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டிய மக்கள் பிரகடனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் அயலிலுள்ள நட்புநாடான இந்தியாவையும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அடங்கலான மையக்குழு நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா.சபையையும் கோருகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்தி : பதுர்தீன் சியானா
மன்னாரில்...
100 நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100ம் நாள் பிரகடன ஒன்று கூடலானது இன்று காலை 11 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' , நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசு கேட்கவில்லை.
இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ' வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ' '13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு அபகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதன் போது 'புரையோடிக் கிடக்கும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான
சமஷ்டி அரசியல் தீர்வு' வேண்டிய மக்கள் பிரகடனம் இடம் பெற்றது.
செய்தி: ஆசிக்
அம்பாறையில்...
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் பிரகடனத்துடன் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு கடற்கரை பகுதியிலுள்ள பிரதேச பூங்கா அருகில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு வேண்டி இந்நிகழ்வானது வட - கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதன் இறுதி நாளான இன்று வடக்கு கிழக்கு தழுவி இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. இதன் போதுஇ பொதுச் சுடர் ஏற்றப்பட்டு 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட முக்கிய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி: பாரூக் சிஹான்
முல்லைத்தீவில்...
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் திகதி தொடங்கிவைக்கப்பட்டுள்ள 100 நாள் செயலமர்வு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் கிராமங்கள் தோறும் போராட்டங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகோரிய அதிகாரப்பகிர்வினை வலியுறுத்தி வந்த போராட்டத்தின் 100 நாளான இன்று (08.11.2022) முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்று திரண்ட மக்கள் பிரகடனத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மக்கள் பிரகடனம் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி: கீதன்



















