ஜிஎஸ்பி அர்ப்பணிப்புகளுக்கான இலங்கையின் நிலை! ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தகவல்
ஐரோப்பிய ஒன்றியம், ஜிஎஸ்பி அர்ப்பணிப்புகளுக்கான தமது உறுதிமொழிகளில் இலங்கை உறுதியான முன்னேற்றத்தை ஊக்குவித்துள்ளதாக இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆளுகை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஆறாவது செயற்குழு, 2022 ஒக்டோபர் 28ம் திகதியன்று கொழும்பில் கூடியதாக இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டம்
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான இருதரப்பு தொடர்புகளின் பின்னணியில் இந்த செயற்குழு கூட்டம் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்கள், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் சட்ட முன் முயற்சிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இதன்போது நல்லிணக்கத்தில் முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்தது.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
அதேநேரம் மனித உரிமைகள் முன்னேற்றத்தில் நீதி மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் வலியுறுத்தின.
இந்நிலையில் அரசியலமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஸ்தாபிப்பதன் மூலம் ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன கண்காணிப்பு, பொது ஆய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட அரசியலமைப்பின் 21வது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுசீரமைக்க மார்ச் 2022 இல் இலங்கை எடுத்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம், ஏற்றுக்கொண்டதுடன், அதன் உறுதிமொழிகளுக்கு இணங்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியது.
எனினும் அந்த சட்டத்தின் அண்மைக்கால பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது.
ஏனினும் மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குறிப்பிட்டது.
இரு தரப்பினரும் சிறுபான்மையினரின் நிலைமை மற்றும் வெறுப்பு பேச்சுக்கு தீர்வு
காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.