எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு! நீண்டகால நெருக்கடிக்கு தயாராகுங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் அவசர எச்சரிக்கை
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என்பதால், அதற்குத் தயாராக இருக்குமாறு ஐரோப்பிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன.
எரிசக்தி விநியோகத் தடை
இந்தச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி ஆணையர் டான் ஜார்ஜென்சன் (Dan Jorgensen) அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "எரிசக்தி விநியோகத் தடையை எதிர்கொள்ள நாடுகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் ஐரோப்பாவிற்கான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களான 'ஜெட் எரிபொருள்' (Jet Fuel) மற்றும் டீசல் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என ப்ரஸ்ஸல்ஸ் கவலை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா தனது விமான எரிபொருள் தேவையில் சுமார் 15 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி எரிபொருள் கப்பல்கள் ஏப்ரல் 10ஆம் திகதியளவில் ஐரோப்பாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும்
அதன் பிறகு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் (Refineries) அவசரமற்ற பராமரிப்புப் பணிகளைத் தள்ளிவைக்குமாறும், உற்பத்தியைக் குறைக்க வேண்டாமென்றும் ஜார்ஜென்சன் பரிந்துரைத்துள்ளார்.
ஐரோப்பாவிடம் சுமார் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு (Stockpiles) இருந்தாலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை என 'ஆர்கஸ் மீடியா' (Argus Media) தெரிவித்துள்ளது.