முக்கிய கனிமங்களைக் குறிவைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்: தென்னாப்பிரிக்காவில் பிரம்மாண்ட முதலீட்டு மாநாடு
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள முக்கிய கனிம வளங்களைக் கைப்பற்றுவதில் உலகளாவிய போட்டி நிலவி வரும் வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் தென்னாப்பிரிக்காவில் தனது முதலாவது பிரம்மாண்ட முதலீட்டு மாநாட்டை நடத்தியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் பங்குச் சந்தையில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
கடந்த 2025-ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே கையெழுத்தான 'தூய்மையான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு ஒப்பந்தத்தின்' கீழ், சுமார் 12 பில்லியன் யூரோ (13.98 பில்லியன் டொலர்) முதலீட்டைத் திரட்டுவதற்கான முதல் முக்கிய முயற்சியாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்புத் திட்டங்கள்
எரிசக்தி மாற்றம், நவீன ஆயுதத் தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தேவையான முக்கிய கனிம வளங்களைப் பெறுவதற்காக மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்காவை நோக்கித் திரும்பியுள்ளன.

"எங்கள் நோக்கம் வெறும் கனிமங்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்ல; அவற்றை இங்கேயே சுத்திகரித்து, செயலாக்கம் செய்து, தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதே ஆகும்" என்று தென்னாப்பிரிக்க வர்த்தக அமைச்சர் பார்க்ஸ் தாவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிக்குச் சீனா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம் மாற்றுச் சப்ளை செயினை உருவாக்கத் தீவிரமாக முயன்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தென்னாப்பிரிக்காவில் பசுமை ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த ஏற்கனவே பல பில்லியன் யூரோ மதிப்பிலான கடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.