இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள எச்சரிக்கை
பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி (Denis chaibi) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை,எதிர்வரும் 2023 ஆம் ஆண்டளவில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் செயற்திட்டத்தின் போது பாரிஸ் உடன்படிக்கை உள்ளிட்ட சூழல்நேய செயற்பாடுகள் உள்வாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணைந்து இலங்கையின் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பசுமை அபிவிருத்தி தொடர்பான கொழும்பு அபிவிருத்தி கலந்துரையாடல்' என்ற தலைப்பிலான மாநாடு இன்று ஆரம்பமானது.
'பசுமை அபிவிருத்தி' என்ற தொனிப்பொருளின் கீழ் சூழலுக்கு நேயமான அபிவிருத்தி செயற்திட்டங்கள், காலநிலை மாற்றங்களைக் கையாளல், சூழலுக்குப் பாதிப்பேற்படாத வகையில் உரியவாறு கழிவுகளை அகற்றல் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 'பசுமை அபிவிருத்தி' தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி கருத்து வெளியிடுகையில்,
பசுமை அபிவிருத்தி தொடர்பான இந்த விரிவான கலந்துரையாடலை ஐரோப்பிய ஒன்றியம் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன், அதன் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கைகளையும், செயற்திட்டங்களையும் தயாரிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் உள்ள மழைக்காடுகள் மற்றும் ஏனைய பிரத்தியேகமான வளங்கள் பசுமை அபிவிருத்தி தொடர்பில் பேசுவதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை மிகவும் பொருத்தமான இடமாகத் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே பசுமை அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களுக்காக (மலர்கள் வளர்ப்பு) 18 ஆயிரம் யூரோக்களும், எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக 2000 யூரோக்களும், கோவிட் - 19 வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 மில்லியன் யூரோக்களும், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு - செலவுத்திட்டத்தில் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான நிதியொதுக்கீட்டில் பிரத்தியேகமாக கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கலில் பாரிஸ் உடன்படிக்கை உள்ளடங்கலாக சூழலுக்கு நேயமான விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.