செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது ஐரோப்பிய ஒன்றியத் தூதர் செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தூதுவர்களிடம் கோரிக்கை மனு
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் என 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
தூதுவர்களின் வருகையையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரும் சிவில் அமைப்புக்களும் இணைந்து செம்மணி - சித்துப்பாத்தி மயானத்துக்கு முன்னால் ஏ - 9 வீதியோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற தூதுவர்கள் குழுவினர், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான வாயிலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ உறவினர்களை ஆரத்தழுவிக் கண்கலங்கியமையுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கவனமாகக் செவிமடுத்தார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் சார்பில் தூதுவர்களிடம் கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டது.