இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி உறுதி
பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்தி நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) தனியார் விடுதி ஒன்றில் நேற்று (02) நடைபெற்ற யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை
தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதே தவறை மீண்டும் நடக்க அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஏனையவர்களின் பொறுப்பாகும்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல், மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை இதன்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன், மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கான அபிவிருத்தி
மேலும் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ஒன்றாக அபிவிருத்தி செய்ய வேண்டும். நான் அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருந்த போதிலும் பின்னர் அது பின்தங்கிப் போனது.
தற்போது போர் முடிந்துவிட்டது. எனவே யாழ்ப்பாணத்தையும் வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.
புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
2022 ஆம் ஆண்டில் நாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் கடுமையானவை. இருந்தாலும், நாம் அதை உறுதியுடன் எதிர்கொண்டோம்.
நமது நாட்டை முன்னேற்றும் சவாலை வெல்வோம். அனைவரும் ஒன்றுபட்டு புதிய பயணத்தை தொடர்வோம் என்று அழைப்பு விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |