முல்லைத்தீவில் அதிகரிக்கும் யானை அட்டகாசம் - நேரில் சென்று பார்வையிட்ட எம்.பி. ரவிகரன்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலைமைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அந்த பகுதி மக்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரது முறைப்பாட்டிற்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிக்கு நேற்றையதினம்(30) நேரில் சென்று காட்டுயானைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களைப் பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள மக்களின் முறையீட்டிற்கு அமைவாக ஏற்கனவே கடந்த 20.09.2026அன்று இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பிலக்குடியிருப்பில் மக்கள் காட்டுயானைகளால் பாதிப்புக்குள்ளாகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைக்குமாறு குறித்த கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டுமிருந்தது.
யானைவேலி அமைக்க நடவடிக்கை
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தலையடுத்து, 2027ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பிலக்குடியிருப்பு கிராமத்திற்கு யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அதன் பின்னரும் பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அண்மையில் பிலக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானையால் வீடொன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பயிர்நிலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிலமைகளை நேரில் பார்வையிட்டுநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிலக்குடியிருப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைத் தீர்க்க தம்மால் கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

