உக்ரைனுக்காக அமைதி பேச்சுவார்த்தைகளில் உதவ தயாராக இருக்கிறேன்: துருக்கி அதிபர்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அனைத்து உதவிகளையும் செய்ய துருக்கி தயாராக இருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று (24) தொடர்பு கொண்டு பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, உக்ரைனின் மரியுபோலில் காயமடைந்தவர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் எர்டோகன் தெரித்துள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பு துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து குடிமக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டியதன் அவசியம் பற்றி துருக்கி அதிபரிடம் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, கருங்கடலில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுடனும் நல்ல உறவுகளை கொண்டுள்ளது. இந்த போரில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை எதிர்க்கும் அதே சமயம், உக்ரைனுக்கும் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.