சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயரின் திடீர் மரணத்தின் சந்தேகம்! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்
ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பின் நீதித்துறை வைத்திய அதிகாரியால் நேற்று (3) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் போது, மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்காக எராஜ் பெர்னாண்டோவின் உடலிலிருந்து மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதித்துறை வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் மேயரின் திடீர் மரணம்
திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில், முன்னாள் மேயரின் உடல் நேற்று முன் தினம் (2) காலை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் படி, குடியிருப்பில் உள்ள அறைகளில் ஒன்றின் அருகே கதவில் கட்டப்பட்டிருந்த பட்டியினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
முன்னாள் மேயருடன் மற்றொரு நபரும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் மேலும் கூறியுள்ளது.
இருப்பினும், அந்த நபர் முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், நேற்று காலை அந்த நபர் தொலைபேசி மூலம் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, அந்த நபர், குடியிருப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, குடியிருப்பை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.
இதன்போதே முன்னாள் மேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
பல சர்ச்சைக்குரிய வழக்குகள்
இந்த பின்னணியில் எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார்
இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.