புதிய சட்டத் திருத்தத்தால் கிடைக்கவுள்ள நன்மை: தொழில் அமைச்சர் அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் ஆலோசனைசபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
அதைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
பல சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய விதிமுறைகள் காரணமாக ஊழல், முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த ஆவணங்களை தயாரிப்பதில் விண்ணப்பதாரர்கள் பெரும் தொகையை செலவு செய்வதாக கிடைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனவே, எதிர்காலத்தில் உறுப்பினர்கள் தமது தேவைகளுக்காக 30% நிதியை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும், தொடர்ந்து பத்து வருடங்களாக EPF திணைக்களத்திற்கு 300,000 ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள், இந்த 30% முன் நிதியை பெற்றுக் கொள்ளும் தகுதியுடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.