வடக்கு - கிழக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மைகள் கண்டறிப்பட வேண்டும்.. ஸ்ரீகாந் வலியுறுத்து
வடக்கு - கிழக்கில் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், "பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.
வெளியாகும் கருத்துக்கள்..
உள்ளூராட்சி சபைகளை அமைப்பது பற்றிய எமது நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழ் அரசியல் பரப்பிலும் சமூக ஊடகங்கள் மத்தியிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் பேசுபொருளாக மாறியிருந்தனர். அதாவது ட்ரென்ட் ஆக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அண்மைக் காலத்தில் ஊடக நேர்காணல்களை அவதானிப்பீர்களாயின் அதில் கலந்து கொள்ளுகின்ற அரியல்வாதிகளும் சரி, நாடாளுமன்றில் சிறப்புரிகைளுக்குள் பதுங்கி நின்று பேசுகின்றவர்களும் சரி, டக்ளஸ் தேவானந்தாவின் பெயரை உச்சரிப்பதற்கு மறப்பதில்லை.
அதேபோன்று சமூக ஊடகங்களிலும் பார்ப்போமானால் அவர்களுடைய புரோமக்கள் என்று சொல்லப்படுகின்ற முன்னோட்ட காணொளிகளில் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக சொல்லப்படுகின்ற கருத்துக்களுக்கு இடம்கொடுக்கப்படுகின்றது.
தொடர் குற்றச்சாட்டுக்கள்
இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், 90 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மண்டைதீவில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது தலைமையை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை பொறுத்தவரையில் அவர் செயற்பாடுகள் குறுகிய சுயநலன் சார்ந்தவை.
மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி அந்த அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற ஒருவாராக தன்னை வெளிப்படுத்துவதன் மூலம், தன்னுடைய அரசியலை பாதுகாத்துக் கொள்ளுகின்ற ஒருவர். அவரின் அரசியல் சீத்தவத்தை பேசுவதென்றால், நீண்ட நேரம் பேச முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.




