இலங்கை கடற்படைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் அதிகாரங்கள், 2025 ஆகஸ்ட் 13 முதல் இலங்கை கடற்படைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை அவந்த் கார்ட் கடல்சார் சேவைகள் தனியார் நிறுவனம் இந்த சேவையை வழங்கி வந்ததாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், கடற்படையின் கடல்சார் சேவை திட்டத்தின் கீழ் பணிகள் மற்றும் பொறுப்புகளை வகுத்து, பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வாரம் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவிப்பு
2023 ஜனவரி 1, முதல், சர்வதேச கடல்சார் அமைப்பு, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சோமாலிய கடலை அதிக ஆபத்து மண்டலங்களாக நீக்கிய போதிலும், வணிகக் கப்பல்கள் ஆயுதப்படைகளின் சேவைகளைப் பெறுவது தொடர்கிறது என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர சமர்ப்பித்த முன்மொழிவுக்கு ஜூலை 7 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.இதனை தொடர்ந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடற்படை மற்றும் போக்குவரத்தின் ஆயுதக் கிடங்குகளில் வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற உபகரணங்களை சேமித்து வைப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கடற்படையால் செயல்பாட்டு, நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டு கடல்சார் சேவை வழங்கும் நிறுவனங்களின் வணிகக் கப்பல்கள் இலங்கை நீர்வழிப் பயணம் செய்யும் போது, அவற்றில் இருந்து கடற்படையால் வருவாயை பெற்றுக்கொள்ளமுடியும்.
கடந்த காலங்களில் கடல் ஆயுதக் கிடங்கு நடவடிக்கைகள் கடற்படையால் கையாளப்பட்டாலும், வணிகக் கப்பல்களுக்கு கடல்சார் பாதுகாப்பு சேவைகளை அவந்த் கார்ட் கடல்சார் சேவைகள் நிறுவனம் 2012 முதல் வழங்கி வந்தது இதன் மூலம் மில்லியன் கணக்கான வருவாய் ஈட்டப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிறுவனம் மிதக்கும் கடல் ஆயுதக் கிடங்கையும் நடத்தியது. எனினும் அந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியதன் மூலம், அரசுக்கு 11.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையகம் வழக்கு தொடர்ந்தது.
அவந்த் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, ரக்னா லங்கா தலைவர் விக்டர் சமரவீர மற்றும் எம்வி அவந்த் கார்ட்டின் உக்ரைன் கேப்டன் ஜெனடி கவ்ரிலோவ் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச வழங்கிய உரிமம் போலியானது என்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதன் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டில், கொழும்பு மேல் நீதிமன்றம், சேனாதிபதி மற்றும் ஆறு பேரையும் விடுவித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



