பங்களாதேஷில் அமைதியின்மை: இலங்கை மாணவர்களின் தற்போதைய நிலை
பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வேலை ஒதுக்கீட்டு முறையை மாற்றக் கோரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாததாலும் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை,பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நேற்று (19) மாத்திரம் 52 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |