இயந்திர கோளாறா? தீவிரவாதிகளின் சதியா? - முடுக்கிவிடப்பட்ட விசாரணை! ஆராயப்படும் கருப்புப்பெட்டி
தமிழ்நாடு - நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த இந்திய இராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உட்பட 13 உயிரிழந்த சம்பவம் தற்போது இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
கோவை சூலூரிலிருந்து குன்னூர் இராணுவ பயிற்சி பள்ளிக்குச் சென்றபோதே இந்த விபத்து காட்டேரி என்னும் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்கடனில் பயிற்சி மையத்தில் நடைபெறவிருந்த ஒரு பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உட்பட அதிகாரிகள் 14 பேர் முற்பகல் 11.45 மணிக்குக் கோவை சூலூரிலிருந்து எம்.ஐ.17வி-5 ரக இராணுவ ஹெலிகாப்டரில் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
நண்பகல் 12.20 மணியளவில் வெலிங்டனை அடைவதற்கு 10 கிலோ மீட்டர் தூரம் இருந்த நிலையில்,குன்னூர் பிரதேசத்தின் காட்டேரி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் தீடிரென வெடித்துச் சிதறியுள்ளது.
பிற்பகல் 1மணி அளவில் பயணித்தவர்களில் 4 பேர் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குத் தீயில் கருகிய நிலையில் மலைப்பாதையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மதியம் 2.15மணி அளவில் விபத்தின் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வடைந்தது.
இந்த நிலையில் மாலை 4.50 மணி அளவில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 உயிரிழந்ததாக ஏ.என்.ஐ தகவல் வெளியிட்டது. மாலை 6.05 மணி அளவில் நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விபத்துக்குள்ளான எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் கடந்த 2012ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரை ரஷ்ய ஹெலிகாப்டரின் துணை நிறுவனமான கசான் நிறுவனம் தயாரித்தது.
இந்த ஹெலிகாப்டரில் காலநிலையைத் தெரிந்து கொள்ளும் ரேடார், இந்த தலைமுறைக்கான இரவுநேரத்தில் துல்லியமாக இலக்குகளைப் பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கலாம், நகரும் இலக்குகள், ராக்கெட் வீச்சு, எந்திரத்துப்பாக்கிகள் எனத் தாக்குதல் வசதிகளும் இந்த ஹெலிகாப்டரில் அதிகமாக இருந்தன.
உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர்களில் இந்த எம் ஐ 17வி 5 ஹெலிகாப்டரும் ஒன்றாகும். இந்தியாவுக்குத் தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளைச் சிறப்பாகச் செயலாற்ற வைக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் பிபின் ராவத்.
2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு சுமார் 10 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவத்தின் தளபதியாக பணியாற்றியவர். மிகவும் வலிமையான ராணுவ வீரர் என்றும், முன்னுதாரணமான ராணுவ தளபதியாகவும் அறியப்பட்டவர் 63 வயதாகும் பிபின் ராவத்.
தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக்குழு, வெலிங்டன் ராணுவ மையக்குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்துள்ளது. கருப்புப்பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லி கொண்டுசென்று ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை வைத்து விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்த விவரங்களைக் கண்டறியப்படவுள்ளது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய கருப்புப்பெட்டியை ஆய்வுசெய்ய அதிகாரிகள் தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஹெலிகாப்டர் மின்கம்பத்தில் மோதியதால் விபத்து நேரிட்டுள்ளதா?
இயந்திர கோளாறு ஏற்பட்டதா?
தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாமா?
போன்ற பல்வேறு கேள்விகள் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டுள்ளன.
