EPF பணத்திற்கு ஆபத்தா..! வரியும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி செயற்படுகிறார். கடுமையான நிபந்தனைகள் ஒட்டுமொத்த மக்களுக்கும் சாபமாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த எந்த திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்தை கொண்டு எவரிடமிருந்து கடன் பெறலாம் என்பது குறித்து மாத்திரமே அவதானம் செலுத்தப்படுகிறது.
சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது
தேசிய கடன்களை மறுசீரமைப்பதால் வங்கி கட்டமைப்பு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள சகல கடன்களும் தரவிறக்கம் செய்யப்படும். அதனை தொடர்ந்து புதிய பிணைமுறிகள் வழங்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகிறார்.
பிணைமுறிகளை புதிதாக விநியோகிக்க வேண்டுமாயின் நேரடி வட்டி வீதம் அதிகரிக்கப்பட வேண்டும். மீண்டும் வரி வீதம் அதிகரிக்கப்பட்டால் சமூக கட்டமைப்பில் ஒருபோதும் அமைதி நிலவாது.
நாட்டு மக்களின் உழைப்பை சூறையாடும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உறுதிப்படுத்தும் தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |