மின்சார ஊழியர்கள் மீது தாக்குதல்: புத்தளத்தில் சம்பவம்
புத்தளம் - மதுரங்குளி, முக்குத்தொடுவ பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவரை மணல் விற்பனை செய்யும் வர்த்தகர் உள்ளிட்ட சிலர் கடுமையாக தாக்கியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான புத்தளம் மின்சார சபை அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபடும் இரண்டு ஊழியர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் மணல் விற்பனை செய்து வரும் வர்த்தகரின் வியாபார தளத்தில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு திரும்பிய வேலை சந்தேக நபர்கள் குறித்த இருவரையும் மறைத்து தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சாரத்தை துண்டிக்கும் ஊழியர்கள் இருவரும் குறித்த இடத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பதற்காக சென்றபோது, அங்கிருந்த பெண்ணொருவரிடம் தெரிவித்துவிட்டே மின்சாரத்தை துண்டித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
எனினும், மின்சார பட்டியலை செலுத்திவிட்டு தங்களுக்கு அறியத்தந்தால் மீண்டும் மின் இணைப்பை வழங்குவதாகவும் அந்த ஊழியர்கள் அங்கிருந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



