வவுனியா மாவட்ட அனர்த்த நிலை தொடர்பில் அவசர கலந்துரையாடல் (PHOTOS)
வவுனியா மாவட்ட அனர்த்த நிலை மற்றும் அனர்த்த முன்னேற்பாடுகள் குறித்த அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், குளங்களின் நீர்மட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செலகங்களுடன் இணைந்து கிராம மட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்து வரும் நிலையில், திடீரென ஏற்படும் அனர்த்தங்களை தடுக்க இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகும் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், அவ்வாறான அனர்த்தங்கள் ஏற்ப்படும் பட்சத்தில் அதனை இராணுவத்தினரின் உதவியுடன் நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டது.
மேலும், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஐ.இன்பராஜா, இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், நீர்பாசன திணைக்கள பொறியலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




