1000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானியா வந்தடைந்தது வரலாற்றுச் சிறப்புமிக்க பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் இரத்தம் தோய்ந்த இடைக்கால வரலாற்றைச் சித்தரிக்கும், விலைமதிப்பற்ற 70 மீட்டர் நீளமுள்ள 'பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி' சுமார் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பிரித்தானியா கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரான்ஸிலிருந்து லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் இந்த வரலாற்று கலைப்படைப்பு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பேயோக்ஸ் எம்பிராய்டரி துணி
லினன் துணியில் கம்பளி நூல்களால் நெய்யப்பட்ட இந்தத் துணி, 1066 ஆம் ஆண்டில் நார்மண்டியின் பிரபு வில்லியம், இங்கிலாந்தின் மன்னர் ஹெரால்டை வீழ்த்தி இங்கிலாந்தைக் கைப்பற்றிய புகழ்பெற்ற 'ஹேஸ்டிங்ஸ் போரின்' 58 காட்சிகளைத் தத்ரூபமாக விவரிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான சுமுக உறவை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இந்த வரலாற்றுத் துணியை பிரித்தானியாவுக்குக் கடனாக வழங்கியுள்ளார்.

இதற்குப் பதிலாக, இங்கிலாந்தின் மிக முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்பான 'சட்டன் ஹூ' ஆங்கிலோ-சாக்சன் கலைப்பொருட்களைப் பிரித்தானியா அருங்காட்சியகம் பிரான்ஸிற்கு வழங்கவுள்ளது.
வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட பிரத்தியேகப் பெட்டியில் வைக்கப்பட்டு, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கடல்வழிச் சுரங்கப்பாதை வழியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்படைப்பு, 2027 ஜூலை வரை லண்டன் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.