ருவிட்டரை வாங்கும் எலோன் மஸ்க்: எதிர்காலத்தில் அவரது ‘X’ செயலி தொடர்பில் வெளியான தகவல்
ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக, அந்நிறுவனத்திற்கும் எலோன் மஸ்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நீதிமன்றம் வரை சென்று இழுபறியில் இருந்த நிலையில், அண்மையில் ருவிட்டர் நிறுவனத்திடம் எலோன் மஸ்கின் வழக்கறிஞர் அளித்த கடிதம் மூலம் இந்த விவகாரம் முடிவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
அந்த கடிதத்தில் ருவிட்டர் நிறுவனத்தை வாங்க எலோன் மஸ்க் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X செயலி
இந்த நிலையில், ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவது, X என்ற "எவரிதிங் ஆப்" செயலியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என கடந்த புதன்கிழமையன்று எலோன் மஸ்க் பதிவிட்டிருந்த ஒரு ருவீட் பேசுபொருளானது.
ருவிட்டரை எலோன் மஸ்க் வாங்குவது தொடர்பான இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
ருவிட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை எலோன் மஸ்க் வாங்கியிருந்த நிலையில், அவரை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் சேர அந்நிறுவனம் அழைப்பு விடுத்தது.
முதலில் அதை ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க், பின்னர் மறுத்து விட்டார்.
Buying Twitter is an accelerant to creating X, the everything app
— Elon Musk (@elonmusk) October 4, 2022
அதனைத் தொடர்ந்து, ருவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
முதலில், எலோன் மஸ்க்கிடம் அதிக பங்குகள் குவிவதைத் தடுக்க முயற்சி எடுத்த ருவிட்டர் நிறுவனம், பின்னர் மொத்த நிறுவனத்தையும் கையகப்படுத்துவதற்காக அவர் கொடுக்க முன்வந்த 44 பில்லியன் அமெரிக்க டொலரை ஏற்க முடிவெடுத்தது
அதன் பிறகு, ருவிட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை அந்நிறுவனம் கூறியதைவிட அதிகம் என எலோன் மஸ்க் கூற, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்தது.
எலோன் மஸ்கின் முடிவு
பின்னர், ருவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்குவதாக எலோன் மஸ்க் அறிவித்தார்.
எந்தவித முன்யோசனையும் இல்லாமல் ருவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் எலோன் மஸ்க் இறங்கியதாக ஊகங்கள் எழுந்தன.
இதற்கான தொகையையும் தன்னுடைய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் சில பங்குகளையும் விற்று நிதி திரட்ட எலோன் மஸ்க் முடிவு செய்திருந்தார்.
அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களை அச்சம் கொள்ளச் செய்ததோடு, இறுதியில் அந்த முடிவில் இருந்து அவரைப் பின்வாங்கவும் செய்தது.
இரு வாரங்களுக்குள்ளாகவே இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டனர்.
ருவிட்டர் விற்பனையை நிறைவு செய்ய ருவிட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து எந்தவொரு தரப்பும் வெளியேறினால் மற்றொரு தரப்பிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டிருந்தது.
எலோன் மஸ்க் மற்றும் ருவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இடையேயான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திய தனிப்பட்ட செய்திகள் மற்றும் அதைத் தீர்த்து வைக்க ருவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி எடுத்த முயற்சிகள் உட்பட சில தனிப்பட்ட விஷயங்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தன.
"X எவரிதிங் செயலி" குறித்த அவரது ருவிட்டை பார்க்கையில், சீன செயலியான'WeChat' போன்ற செயலியை உருவாக்க எலோன் மஸ்க் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
செய்தி அனுப்புதல், சமூக வலைத்தளம், பணம் அனுப்புதல், உணவு ஆர்டர் செய்வது உட்பட பல வசதிகளை உள்ளடக்கியது 'WeChat'.
300 மில்லியன் வரையிலான மாதாந்திரப் பயனர்களைக் கொண்டுள்ள ருவிட்டர் நிறுவனம், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறியதே.
அதேபோல, டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் போல அதிவேகமான வளர்ச்சியை எப்போதும் ருவிட்டர் கண்டதில்லை.
செல்வாக்குமிக்க ருவிட்டர்
அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர ருவிட்டரை பரவலாகப் பயன்படுத்துவதால் அது செல்வாக்குமிக்கதாகக் கருதப்படுகிறது.
ருவிட்டரை வாங்குவதற்கான விருப்பத்தை எலோன் மஸ்க் முதலில் தெரிவித்தபோது, ட்விட்டர் தளத்தை அதிகப்படியான கருத்து சுதந்திரத்திற்கும் மிதவாதத்திற்குமான தளமாக மாற்ற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
எலோன் மஸ்க் வழக்கறிஞரின் கடிதம் குறித்த தகவல் வெளியானதும், ருவிட்டரின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
ருவிட்டர் தளத்தை முற்றிலும் மாறுபட்ட களமாக எலோன் மஸ்க் மாற்ற நினைக்கலாம். அது ஒருவேளை, தற்போதுள்ள பயனர்களை அந்நியப்படுத்தலாம். அதேநேரத்தில் புதிய பயனர் கூட்டத்தையும் கொண்டு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.