முல்லைத்தீவில் யானைகளின் அட்டகாசம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில் பொதுமக்கள் கவனமாக பயணங்களை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை வெள்ளமலையேத்தம் பகுதியில் யானைகள் வீதிக்கு குறுக்காக நடமாடுவதோடு நீண்டநேரம் வீதியோரங்களில் மேச்சலில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
மழை காலங்களில் மாலை வேளையில் விரைவாக இருட்டி விடுவதால் பயணிகள் மாலைப்பொழுது பயணங்களை இந்த பகுதியூடாக மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது சாலச்சிறந்தது என அவதானங்களை மேற்கொண்டவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
சேதமாகும் தேக்க மரங்கள்
வெள்ளமலையேத்தம் வீரையடி பிள்ளையார் கோவிலுக்கு முன்னுள்ள தேக்கம் காட்டில் யானைகளால் தேக்க மரங்கள் சேதமாக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பலமுறை இத்தகைய சேதமாக்கப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுகின்றார்.
வீதியோரமாக உள்ள தேக்கம் மரங்களை முறித்து அதன் பட்டைகளையும் தண்டினையும் அதிகமாக யானைகள் விரும்பி உண்ணுகின்றன.
இப்பகுதியில் உள்ள தேக்கம் மரங்கள் வயதில் குறைந்தவையாக உள்ளன.தொடர்ச்சியாக இப்பகுதியில் யானைகளின் இத்தகைய செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.ஆயினும் இம்முறை குறுகிய இடைவெளியில் பலதடவை யானைகள் தேக்கம் மரங்களை முறித்துண்ணுவதை அவதானிக்க முடிகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயணிப்போருக்கு எச்சரிக்கை
யானைகளின் நடமாட்டம் இரவுப்பொழுதுகளிலேயே அதிகமாக இருக்கின்றன.
வெள்ளமலையேத்தம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் யானைகள் வீதியை கடக்கின்றன.
இருபக்கங்களிலும் கூழாமுறிப்பு A மற்றும் கூழாமுறிப்பு B பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்க காட்டுப்பகுதியில் இருந்து அடுத்த பக்க காட்டுப்பகுதிக்கு யானைகள் இடம் மாறி பயணிக்கும் போது வீதியை குறுக்கறுத்து செல்லும்.அந்த நேரங்களில் வீதியோரங்களில் மேச்சலில் அவை ஈடுபடுவதாக கூழாமுறிப்பு பகுதியில் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயியொருவர் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
மழைக்காலம் நீடித்துள்ள சூழலில் மாலை நேர மற்றும் இரவுப்பயணங்களை இப்பகுதியூடாக மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |