முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றிசுவரர் கோவிலில் காணாமலாக்கப்பட்ட யானைத் தந்தம்
முல்லைத்தீவு(Mullaitivu) ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் சிவாலயத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த யானைத் தந்தங்கள் இரண்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆலயத்தில் மூலஸ்தான மூர்த்தியாக இருந்து வரும் சிவலிங்கத்தின் இரு புறங்களிலும் நீண்ட காலமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த யானைத் தந்தங்களே காணாமலாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் திருவிழாவில் இலிங்கத்தின் இருபக்கங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த இரு யானைத் தந்தங்களும் இம்முறை (2024) நடைபெற்ற உற்சவ காலத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கவில்லை என ஒட்டுசுட்டானில் உள்ள சிவ பக்தர்கள் தங்களது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.
உற்சவ காலம்
உற்சவ தேவஸ்தானமாக வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள ஆலயமாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கின்றது.
1949.05.27 திகதியிடப்பட்ட 9978 ஆம் இலக்கம் கொண்ட அரச வர்த்தமானியிலும் 1959.05.26 திகதியிடப்பட்ட 10105 ஆம் இலக்கம் கொண்ட அரச வர்த்தமானியிலும் உற்சவ தேவஸ்தானமாக பிரசுரிக்கப்பட்டிருப்பதும் இங்கே நோக்கத்தக்கது.
இவ்வாறு நடைபெறும் வருடாந்திர உற்சவம் 16 நாட்களை கொண்டதாக இருப்பதும் அது ஒட்டுசுட்டான் பிரதேசத்தினைச் சூழவுள்ள கிராம மக்களையும் அரச அலுவலர்களையும் ஒன்றிணைத்து வெகுவிமர்சையாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
உற்சவ காலத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வந்திருந்த யானைத் தந்தங்கள் இந்த வருடம் நடைபெற்ற உற்சவ திருவிழாக்கள் நடைபெற்றபோது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கவில்லை.
யானைத் தந்தங்களை ஏன் காட்சிப்படுத்தவில்லை என்ற கேள்வியினை ஒட்டுசுட்டான் தான்தோன்றிசுவர் ஆலயத்திற்கு தினமும் சென்று வரும் சிவபக்தர்கள் தங்களின் அவதானிப்பினை அடிப்படையாக கொண்டு இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தனர்.
இது தொடர்பில் சமூக ஆர்வலரும் சிவபக்தருமான ஒட்டுசுட்டானில் வாழ்ந்துவரும் பக்தர் தன் முகநூலிலும் இது தொடர்பில் குறிப்பிட்டு பதிவேற்றியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தவருட திருவிழா
இந்த வரும் (2024) நடைபெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் உற்சவத்தின் போது தான் 16 நாட்களும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வந்திருந்ததாக குறிப்பிடும் சிவபக்தர் யானைத் தந்தங்கள் பற்றி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
முன்னர் நடைபெறும் ஆலய உற்சவத்தின் போது மூலஸ்தான மூர்த்தியாக இருக்கும் சிவலிங்கம் அதிகளவில் ஒளியூட்டப்பட்டு பிரகாசமாக இருக்கும்.அத்தோடு அதன் இரு பக்கங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் யானைத் தந்தங்களையும் அப்போது இனம் கண்டு கொள்ள முடியும்.
இராஜ கோபுரம் அமைக்கும் முன்னர் அது அமைக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வந்திருந்த காலத்தில் நடைபெற்ற உற்சவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவர் இதற்கு சான்றாக முன்வைத்திருந்தார்.
இந்தாண்டு நடைபெற்ற உற்சவத்தின் போது அவ்வாறு மூலஸ்தானத்தில் ஒளியூட்டப்பட்டிருக்கவில்லை.யானைத் தந்தங்களையும் சிவலிங்கத்தின் இரு பக்கங்களிலும் காணமுடியவில்லை என குறிப்பிட்ட அவர் இந்த வருடம் உற்சவ காலத்தின் போது எடுத்திருந்த மற்றொரு புகைப்படத்தினையும் பகிர்த்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தினரின் விளக்கம்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் யானைத் தந்தங்கள் பயன்பாட்டில் இருந்து வந்திருந்தன என்பதனை உறுதி செய்து கொள்ள முடிவதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினால் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திடம் கேட்கப்பட்டிருந்த விளக்கங்கோரல் ஒன்றுக்காக அவர்கள் பிரதேச செயலாளர் அவர்கட்கு, பிரதேச செயலகம், ஒட்டுசுட்டான் என்று முகவரியிடப்பட்டு 01.09.2016 இல் எழுதியிருந்த கடிதமொன்றில் யானைத் தந்தங்கள் பற்றிய விளக்கமளிப்பு ஒன்றும் இடம் பெற்றிருப்பதனை சுட்டிக்காட்டலாம்.
தலைவர்/செயலாளர்,ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில்,முகாமைத்துவ சபை, ஒட்டுசுட்டான் என தங்கள் முகவரியினை குறிப்பிட்டு தயாரித்திருந்த அந்த விளக்கமளிப்புக் கடிதத்தில் 15 ஆவது விடயமாக ஆலயத்தில் உள்ள யானைத் தந்தங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றனர்.
அதில் " யானைக் கொம்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவாறு யானைக் கொம்புகள் இரண்டும் சிவலிங்கத்திற்கு அருகிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன." என இருப்பதையும் அவதானிக்கலாம்.
யானைக் கொம்புகள்
யானைக் கொம்புகள் தொடர்பில் சிவபக்தர்கள் முன் வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் கருத்திலெடுக்கப்படுமானால் மீண்டுமொரு விளக்கமளிப்புக்கு ஆலய முகாமைத்துவசபை முகம்கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.
இம்முறை யானைக் கொம்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதனை அவதானிக்க முடியவில்லை.அப்படி என்றால் அது எங்கே? அவர்களது கேள்வி தொடர்பில் கருத்துரைக்கும் பலரும் அது நியாயமான கேள்வியே என்ற தொனிப்பொருளில் கருத்துரைத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்த யானைக் கொம்புகள் எங்கே? அவை ஆலயத்தின் பாதுகாப்பில் இப்போதும் இருக்கினாறனவா? அல்லது அவை காணாமல் ஆக்கப்பட்டு விட்டனவா? என்ற கேள்வி தொடர்பில் உரிய தரப்புக்கள் விளக்கமளிப்பதோடு இருக்கும் எனின் அவற்றை மீண்டும் முன்னர் இருந்தது போல் மூலஸ்தான மூர்த்தியாக அருள்பாலிக்கின்ற சிவலிங்கத்தின் இரு பக்கங்களிலும் இருக்கும் வண்ணம் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இது தொடர்பில் உற்சவ ஆலயம் என்றடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் முன்வைப்பதும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |