காட்டு யானைகளுடனான மோதலைத் தடுக்க நடமாடும் ரோந்து
யால தேசிய பூங்காவிற்குள் காட்டு யானைகள் சஃபாரி ஜீப் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக இலங்கையின் வனவிலங்கு திணைக்களம் இரண்டு நடமாடும் ரோந்துப் படையினரை நியமித்துள்ளது.
கமுனு மற்றும் நந்திமித்ரா எனப்படும் கம்பீரமான யானைகளால் அண்மைய நாட்களில் பல சஃபாரி ஜீப்புகள் தாக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு யானைகளும் வெள்ளிக்கிழமை இரண்டு சஃபாரி ஜீப்புகளை தாக்கியதாகவும், மற்றொரு சஃபாரி ஜீப் மீது வேறு யானை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் சபாரி ஜீப் சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நந்திமித்ரா என்ற கம்பீரமான யானையுடன் எதிர்பாராத மோதலைத் தொடர்ந்து புதன்கிழமை (9) யால தேசிய பூங்காவிற்குள் சஃபாரி ஜீப் ஒன்று நசுக்கப்பட்டது. நான்கு பிரான்ஸ் பிரஜைகளை ஏற்றிச் சென்ற ஜீப் புதன்கிழமை (9) காலை 10:30 மணியளவில் நந்திமித்திரனால் தாக்குதலுக்கு உள்ளானது.
வெல்மல்கெம பகுதியில் யானை நடமாடுவதாக மற்றுமொரு சஃபாரி ஜீப் வண்டியின் சாரதிக்கு தெரியப்படுத்தியதாகவும், இதனால் நான்கு பிரான்ஸ் சுற்றுலா பயணிகளுடன் ஜீப் அந்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இடத்தை அடைந்ததும், சஃபாரி ஜீப் ஒரு குறுகிய சாலையில் யானையுடன் நேருக்கு நேர் வந்தது, இதன் காரணமாக, ஓட்டுநரால் திரும்பிச் செல்ல முடியவில்லை.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஜீப் சாரதிகள் பூங்காவிற்கு வருகை தந்து வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அதன் அழகை ரசித்தால் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியும் என யால தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளால் காட்டு யானைகள் தொந்தரவு செய்வதால் மட்டுமே, இலங்கையில் உள்ள யால தேசிய பூங்கா மற்றும் பிற தேசிய பூங்காக்களில் இதுபோன்ற காட்டு யானைகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.



