மட்டக்களப்பில் யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டை பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சற்று அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
யானை வேலிகள் உடைக்கப்பட்டு, யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதால் உயிர் மற்றும் சொத்து சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை
இது தொடர்பில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கலந்துரையாடியதன் அடிப்படையில், இன்று(23.07.2026) பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் நியமிக்கப்பட்டு யானைகளை விரட்டும் தற்காலிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் யானைகள் தென்பட்டால் அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டொர்ச், பட்டாசு போன்றவற்றை தனியாக பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதேவேளை, இதற்கான நிரந்தர தீர்வாக யானைகளை மாவட்ட எல்லையை கடந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.