வாய்வெடி தாக்குதலால் யானை பலி: தீவிர விசாரணையில் வனஜீவராசிகள் திணைக்களம்!
திருகோணமலை, மொரவெவ - அவ்வைநகர் பகுதியில் "வாய்வெடி" உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்றையதினம்(7.2.2026) அவ்வைநகர் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த யானையின் வாய் பகுதி அதிகளவில் வீக்கமடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பு
இது தொடர்பில் கிரிதல வனவிலங்கு திணைக்கள கால்நடை வைத்தியர் கலிங்கு ஆராய்ச்சி முன்னெடுத்த பிரேத பரிசோதனையில், யானை வாய்வெடி உட்கொண்டமையாலேயே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மொரவெவ பிரதேசத்தில் யானைகளின் உயிரிழப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கடந்த வருடத்தில் மட்டும் 06 யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்த மரணத்துடன் சேர்த்து மொத்தமாக 07 யானைகள் அப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொரவெவ பகுதியில் வனவிலங்குகள் திட்டமிட்டு கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், சட்டவிரோதமான வெடிபொருட்களைப் பயன்படுத்தி விலங்குகளைக் கொல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது உயிரிழந்த யானை தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்து வருவதுடன், குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.