மட்டக்களப்பு - தும்பங்கேணி பகுதியில் யானையொன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (09.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது யானை வீடொன்றின் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக் கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளது.
அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண்கள்
அக்காலப்பகுதியில் வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே தனிமையில் இருந்த பெண்கள் யானையைக் கண்டு பீதியடைந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தவாறு தப்பியோடியுள்ளனர்.

பெண்களைத் துரத்திவிட்டு வீட்டினுள் புகுந்த காட்டுயானை, அங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 10இற்கும் மேற்பட்ட நெல் மூடைகளை கிழித்து துவசம் செய்துள்ளது.
யானைகளின் அச்சுறுத்தல்
போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாகவே காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
