யாழ். வட பத்திரகாளி ஆலயத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவம்
கடந்த 07.05.2025 அன்று யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள வட பத்திரகாளி கோவிலின் இரவு நேர திரு மஞ்சத்திருவிழாவின் போது உபயகாரர்களினால் யானை கொண்டுவரப்படிருந்தது.
இதன் போது மிகச் சத்தமாக வான வெடிகள் வெடிக்கப்பட்டு தாவடியூர் மட்டுமல்லாது அருகிலிருந்த ஊர்களும் அதிர்ந்தது.அது மட்டுமல்லாது செண்டி மேளம். தீப்பந்தம் சுற்றுதல் போன்ற இதர நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.
ஐம்பதிற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
சிகிச்சைக்காக அனுமதி
இந்த கேளிக்கை நிகழ்வுகளைப் பார்ப்பதற்கென அருகிலுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தமையால் கோவிலில் வழமைக்கு மாறாக சன நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.
அதேவேளை யானைகளுடன் படம் எடுப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருந்தமையினால் பலரும் யானைகளுடன் நின்று படமும் எடுத்துள்ளனர். தொடர்ச்சியான வெடிச் சத்தம் மற்றும் தீப்பந்த விளையாட்டினால் யானை மிரண்டுள்ளது.
இதன் போது அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தும்பிக்கையினால் நெஞ்சில் தாக்கியுள்ளது.அத்தோடு அதே பெண்ணூக்கு காலினால் தொடைப்பகுதியில் தாக்கியுள்ளது.
குறித்த பெண் தொடை எலும்பு பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு அந்த தாயின் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் பிள்ளை யானையுடன் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியுடன் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட தில் முகம் உட்பட உடலின் பல பகுதியில் கடுமையான உரோஞ்சல் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.
இவ்வாறு யானை செல்கையில் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது பிள்ளைகளை யானை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் அவர்களை இழுத்துவிட்டு அவர் நிலத்தில் விழுந்துள்ளார்.
இதன் போது யானையும் கீழே விழுந்து குறித்த தாயின் முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் தனது முழங்காலை ஊன்றி எழும்பியதில் அத்தாயின் கால் பகுதி சிதைவடைந்துள்ளது.
யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை
குறித்த தாயும் கணவரும் 20 நிமிடங்களுக்கு மேலாக துடித்த போதும் யாரும் உதவுவதற்கு முன்வரவில்லை.
பின்னர் சில நல்ல எண்ணம் கொண்ட இளைஞர்களால் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முழங்காலுக்கு கீழ்ப் பகுதி அகற்றப்பட்டு மற்றைய கால் பாதத்திலும் பலத்த காயப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் இந்த நிகழ்வின் போது உடனடியாக ஆலய நிர்வாகமோ, உபயகாரரோ குறித்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. அதன் பின்னர் கூட சம்மந்தப்பட்ட உபயகாரரோ ஆலய நிர்வாகமோ இதுவரை குறித்த பெண்களை தொடர்புகொள்ளவில்லை.மாறாக உபயகாரர் சார்பாக 15 இற்கு மேற்பட்டோர் வைத்திய சாலைக்கு வந்து சென்றுள்ளனர்.
அத்தோடு இது தொடர்பாக செய்திகளை எழுதுபவர்களுக்கு மிரட்டும் பாணியில் இவர்களது நடவடிக்கை அமைந்துள்ளது.
ஒரு யானை ஆலயத்திற்கு அழைத்துவருகிறார்கள் எனின் அதற்கேற்ற முறையான முற்பாதுகாப்பு நடவடிக்கை அனைத்தையும் ஆலய நிர்வாகமும் உபயகாரரும் மேற்கொண்டிருக்க வேண்டும்.
வெறுமனே பொலிஸ் பாதுகாப்பு மட்டும் போதுமா? தீ அணைப்புவண்டி, அம்புலன்ஸ் வண்டி எங்கே? யானைகள் முறைப்படி சட்ட ரீதியாக அனுமதி பெற்று கொண்டுவரப்பட்டதா? முதலுதவிக்காண என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததா? யானையின் இயல்பு சனப்பொழுதில் மாறக்கூடியது.
அன்றையதினம் யானை மதங்கொண்டிருந்தால், நிலைமை என்ன ஆகியிருக்கும் யானையை அடக்கக் கூடிய வல்லமை பொலிஸாருக்கு உண்டா? அல்லது அவர்கள் அதற்கான பயிற்சி பெற்றவர்களா? இவர்கள் பணபலம், அதிகார பலம், ஆட்பலம் உள்ளவர்கள் ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு மூலம் கொடுப்பதற்கே பயப்படுகின்றனர்.
உபயகாரரின் கடந்த கால செயற்பாடுகள் அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்வதற்கு மக்கள் பயப்படுகின்றமைக்கான காரணம் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயமான தீர்வை காலம் தான் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.