மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை
வரட்சியான காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவீனங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவிருந்த மின் கட்டண உயர்வை அக்டோபர் மாதமே தாம் கோரியுள்ளதாக மின்சாரசபையின் பொது மேலாளர் நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
நீர் மின்சார உற்பத்தி
இந்த வருடம் போதிய அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால், மின் உற்பத்திக்கான கூடுதல் செலவை இலங்கை மின்சார சபை ஏற்கவேண்டும் என நரேந்திர டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அவரது கூற்றுப்படி, ஒரு மணிநேர நீர் மின்சாரம் 4,500 ஜிகாவொட் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3,750 ஜிகாவொட் நீர் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், அனல் மின் நிலையங்களில் இருந்து கூடுதலாக 750 ஜிகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டியிருந்தாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள மின்சாரசபையின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |