மின் கட்டணம் அதிகரிக்கிறது! உறுதியாக அறிவித்த ஜனாதிபதி
எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வலுசக்தியின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமாகும். வலுசக்தியின் சுயாதீனத்தன்மை இல்லையாயின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும்.
இதனால் தான் மின்சார சபையை தனியார்மயப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
நடைமுறையில் தனியார் தரப்பினருக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய முடியும்.இருப்பினும் மின்விநியோக கட்;டமைப்பின் தனியுரிமை இலங்கை மின்சார சபைக்கே உண்டு.
யார் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அதனை மின்சார சபைக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆகவே மின்கட்டமைப்பின் தனியுரிமை அரசிடமே இருக்க வேண்டும்.
இலங்கை மின்சார சபையை பராமரிப்பதற்கு தொடர்ந்து மக்களின் வரிப்பணத்தை வழங்க முடியாது. மின்னுற்பத்திக்கான செலவுக்கு அமைய மின்சார சபை மின்பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பது எமது கொள்கை.
மின்னுற்பத்தி செலவுக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
மின்சார சபைக்கு திறைசேரியால் தொடர்ந்து நிதி விடுவிக்க முடியாது. ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான செலவு மற்றும் வரி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மே மாதத்துக்கான எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலக்கிடப்பட்ட எதிர்பார்ப்புக்கு அமைவாகவே மின்கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டுமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் குறைக்கப்பட்டது.
சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம். கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. அதிகளவான சதவீதத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
