தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு மூதவைப் பிரதிநிதிகள் தெரிவு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையின் பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உயரிய தீர்மானங்களை எடுக்கும் நிர்வாக அமைப்பான பேரவையில் மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இவ்விரு சிரேஷ்ட கல்வியாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பது, அவர்களின் கல்விசார் ஆளுமை, நிர்வாக அனுபவம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்திடம் பெற்றுள்ள உயர்ந்த நம்பிக்கைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக கல்வி வட்டாரங்களில் கருதப்படுகிறது.
பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக ஆளுமைத்துவம் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்ற கல்வியாளராகத் திகழ்கிறார்.
பிரதிநிதிகள் தெரிவு
சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வரும் அவர், கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.
அதேவேளை, பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்கள் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறையில் நீண்டகால கல்வி, ஆய்வு மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட கல்வியாளராகப் பரவலாக அறியப்படுகிறார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், தரமான ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கும் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இவர்களின் கல்விசார் அனுபவமும் தொலைநோக்குப் பார்வையும், பல்கலைக்கழகத்தின் எதிர்கால கல்வி, ஆராய்ச்சி, நிர்வாக மற்றும் கொள்கைத் தீர்மானங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக சமூகத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.