இறுதி கட்டத்தை நெருங்கும் வாக்களிப்பு நடவடிக்கை! தேர்தல் வெற்றியின் பின்னரான செயற்பாடு குறித்து அறிவுறுத்தல்
முழு உலகினதும் கவனத்தையும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஈர்த்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றிபெறுவது யார் என்பதை விட தேர்தல் வெற்றியின் பின்னர் செயற்பட வேண்டிய விதம் மிக முக்கியமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு மத்திய நிலையங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை முதல் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. 1 கோடியே 71 லட்சத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடாளாவிய ரீதியில் 13 ஆயிரத்து 321 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் உள்ளன.
வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை நான்கு மணிவரை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவின் பின்னர் 1713 மத்திய நிலையங்களின் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேர்தல் வெற்றியின் பின் செயற்பட வேண்டிய விதம்
இதற்காக சுமார் 60 ஆயிரம் அதிகாரிக்ள வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது இந்த நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் தீர்மானமிக்க தேர்தலாகும். எனவே தேர்தலில் வெற்றிபெறுவது யார் என்பதை விட தேர்தல் வெற்றியின் பின்னர் செயற்பட வேண்டிய விதம் மிக முக்கியமாகும்.
வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும். அதாவது வெற்றிபெறும் வேட்பாளர் மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டியது முக்கியமாகும். இலங்கையில் நடைபெறும் இந்த தேர்தல் முழு உலகின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |