தனியார் துறை சேவை வழங்குநர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
ஒரு சில தனியார் துறையினர் தமது சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்கவில்லை என ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு இயலுமான வகையில் விடுமுறை வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
எனினும் ஒரு சில தனியார் துறையினர் தமது சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்கவில்லை என்று ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தனியார் துறையினரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எனவே ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறு தனியார் துறை சேவை வழங்குநர்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு நாளை (6) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள். சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படும். வாக்களித்ததன் பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். நாட்டின் சட்டம் மற்றும் பொதுஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
