தேர்தலை கண்காணிக்க பொலிஸ் துறையை கையிலெடுத்துள்ள தேர்தல் ஆணையகம்
தேர்தல் தொடர்பான வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களை கண்காணிப்பதற்காக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ், செயற்பாட்டு மையம் ஒன்று அடுத்த வாரத்திற்குள் நிறுவப்படவுள்ளது.
இதுவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களில் முதன்மையானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட மீறல்கள்
முதலாவது மையம் கொழும்பில் அமைக்கப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக மையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான விடயங்களை கண்காணிக்க பிரதி பொலிஸ மா அதிபர் கரவிட்ட, ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஆணையகத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் வேட்புமனுத் தினத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொலிஸ மா அதிபர் ஒருவர் பணியில் இல்லாமை, தேர்தலுக்கு தடையாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியலமைப்பின் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |