ரணில் ஒரு ஜனநாயகப் படுகொலையாளி: தேர்தல் பிரசாரமே வடக்கு விஜயத்தின் நோக்கம் என்கிறார் ரவிகரன்
ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடாத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாகத் தெரிவிக்கும் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), அதிகாரப் பரவலாக்க நோக்குடன் ஜனநாகயத்தைப் படுகொலைசெய்த ஒரு ஜனநாயகப் படுகொலையாளி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலே இவ்வருடத்திற்குள் முதலில் இடம்பெறுமென அமைச்சரவையில் தெரிவித்துவிட்டு, தமிழ்மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு, தேர்தல் பிரசார நோக்குடனேயே ரணில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் தேர்தல் தொடர்பில் வெளியிட்ட கருத்து மற்றும், அவரின் வடக்கிற்கான விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல்
“ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பிற்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடாத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கவுள்ளதாக கடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலைக் கட்டடங்கள் சிலவற்றைத் திறந்து வைப்பதுடன், மக்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கின்றது. அரசியலமைப்பில் ஜனாதிபதித் தேர்தலைப்பற்றியும், பொதுத்தேர்தலைப்பற்றியும் மாத்திரமா குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதிகாரப் பரவலாக்க நோக்குடன் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் மற்றும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் பற்றி இலங்கையின் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லையா?
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிவாரா? அவர் முதலில் இலங்கையின் அரசியலமைப்பைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும். அதன்பிற்பாடு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எவ்வாறு என்பதைப்பற்றிச் சித்திக்கலாம்.
அதிகாரப் பரவலாக்கம்
அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை பாதுகாப்பதானால் முதலில் மாகாணசபைத் தேர்தல்களையும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களையும் எப்போதோ நடாத்தியிருக்கவேண்டும்.
மாகாணசபைகளதும், உள்ளூராட்சிமன்றங்களதும் ஆட்சிக்காலங்கள் முடிவுற்று பல வருடங்கள் கடந்திருக்கின்றன. எனினும் இதுவரை இந்தத் தேர்தல்களை நாடாத்துவதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மிக முக்கியமாக இந்த மாகாணசபைகள் மற்றும், உள்ளூராட்சி மன்றங்கள் என்பன அதிகாரப் பரவலாக்கத்தின் குறியீடுகளாகப் பார்கப்படுகின்றன. குறிப்பாக மாகாணசபைகள் மற்றும், உள்ளூராட்சிமன்றங்களூடாக முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்று கூறிவிட முடியாது.
எனினும் இந்த மணகாணசபை மற்றும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தாததன் மூலம் அற்பசாெற்ப அதிகாரங்களைக்கூட தமிழ் மக்களுக்கு பகிரத் தயாராக இல்லை என்ற விடயத்தை ஆட்சியாளர்கள் கூறுவதாகவே பார்க்க முடிகின்றது.
ரணில் விக்ரமசிங்க
அத்தோடு இந்தத் தேர்தல்கள் நடத்தப்படாததன்மூலம், நாட்டு மக்கள் தமது ஜனநாயகக் கடமைகளையாற்றுவதற்கும், ஜனநாயகத் தெரிவை மேற்கொள்வதற்கும் ஆட்சியாளர்கள் இடமளிக்கவில்லை.
இது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். இத்தகையதொரு ஜனநாயகப் படுகொலையாளியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க, தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாகத் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.
இவ்வாறு தன்னை ஒரு ஜனநாயகப் காப்பாளனாக அறிமுகப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை அறுவடைசெய்வதற்காகவே ரணில் இவ்வாறு வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடாத்தப்படும் என அறிவித்துவிட்டு, தேர்தல் பிரச்சார நோக்கிலேயே அவர், இவ்வாறு வடக்கிற்குப் புறப்பட்டுள்ளார்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |