முதியோர் நலக் காப்பகங்கள் காலத்தின் தேவை! வடக்கு ஆளுநர்
போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பகங்கள் காலத்தின் தேவையாகவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிற்கடவை, துன்னாலை மத்தியில் 'கரவை நலவாழ்வு காப்பகம்' வடக்கு மாகாண ஆளுநரால் இன்று (05.08.2025) திறந்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதியோர் நலக் காப்பங்கள்
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், புலம்பெயர் தமிழர்களில் பலர் இங்கு முதலிடுகின்றார்கள். அவர்களில் சிலர் முதலீடு செய்வதன் ஊடாக உழைத்துச் செல்ல விரும்புகின்றார்கள். பலர் அந்த முதலீடுகள் ஊடாக கிடைக்கும் உழைப்பையும் இங்கேயே திரும்பவும் முதலீடு செய்கின்றார்கள். இவ்வாறான சமூகத்துக்குத் தேவையான காப்பகங்களுக்கு முதலீடு செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இதைச் செய்த கதிரவேலு மனோகரனுக்கு வடக்கு மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம், புலம்பெயர் தேசங்களிலிருந்து உதவிகளைச் செய்த பலர் இங்குள்ளவர்களால் ஏமாற்றப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அன்றிருந்த அரசாங்களும் அப்படியிருந்தததால் மக்களும் அப்படியிருந்தார்களோ தெரியவில்லை. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று சொன்னது சரியாகத்தான் கடந்த காலங்களில் இருந்தது.
இன்று கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கு பெற்றோர் தேவையாக இருக்கின்றனர். பெற்றோர்கள் இயங்கு நிலையில் இருக்கும் வரையில் வீட்டில் வைத்திருக்கும் பிள்ளைகள், அவர்களது இயங்குதிறன் குறைந்ததும் வெளியில் விடுகின்றனர். அப்படியான பெற்றோருக்கு இப்படியான காப்பகங்கள் அரணாக அமையும்.
முதியவர்களுக்கு மரியாதை
இப்போது நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் இலகுவாக பராமரிக்க மறந்து விடுகின்றோம். பெற்றோர் அதாவது எமது மூத்தோர் மிகப்பெரிய சொத்து. அனுபவத்தைப்போன்ற சிறந்ததொரு ஆசான் உலகில் எதுவுமில்லை. அத்தகைய அனுபவசாலிகள் எங்கள் மூத்தோர் - பெற்றோர்தான். அவர்களை இன்று எமது இளம் சமூகம் இழந்து வருகின்றது.
அதேநேரம், முதியவர்களுக்கு மரியாதை வழங்கத் தெரியாதவர்களாகவும் நாங்கள் மாறிவருகின்றோம். இன்றைய இளம் பராயத்தினருக்கு சமூகம் என்றால் என்னவென்று தெரியாத சூழல்தான் இருக்கின்றது. அவர்களது வீடுகளுக்கு அருகில் இருக்கும் சுற்றத்தினர் யார் என்பதே தெரியாது.
இந்தப் பிள்ளைகள் புத்தகப்பூச்சிகளாகக் கூட வளரவில்லை. 'ரியூசன்' பூச்சிகளாகவே வளர்க்கப்படுகின்றார்கள். மற்றையவர்களுக்கு உதவத் தெரியாதவர்களாக வளர்கின்றார்கள். அதனால்தான் இவ்வாறான காப்பகங்கள் எமது சமூகத்துக்குக் கூட அத்தியவசிய தேவையாக மாறி வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 18 நிமிடங்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
