திருகோணமலையில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் படுகாயம்
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்போறுவ பகுதியில் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வயோதிபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வீட்டுக்குப் பின்னால் விறகு எடுப்பதற்காக சென்றபோது இன்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய டி. சுமதிபாலா என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
மக்கள் குற்றச்சாட்டு
இவர் காயமடைந்த நிலையில்,கோமரங்கடவல பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மஹசொறுவெவ பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் யான்ஓயா திட்டத்தின் ஊடாக பாரிய நீர் தேக்கமான யான்ஓயா நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதால் புதிதாக அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு புதிய வீடுகள் அரசினால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
ஆனாலும் அதிக காடுகள் சூழ்ந்து இருப்பதால் மழைக்காலங்களில் யானைகள் மற்றும் கரடிகள் கிராமத்துக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.