ஈச்சம் குளம் நீர்மட்டம் குறைவு: கால்நடை வளர்ப்பு பாதிப்பு
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளம் வற்றி நீர் மட்டம் குறைந்ததால் வறட்சியான கால நிலை நிலவி வருகிறது.
எல் நினோ காலநிலைத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் வற்றும் நிலையை அடைந்துள்ளது.
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாகக் குறைந்து வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீர்ப்பற்றாக்குறை
குறிப்பாக, ஈச்சம் குளத்தின் நீரை நம்பியுள்ள மேட்டு நிலப் பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மிளகாய், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு மேட்டு நிலப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு நீர்ப்பற்றாக்குறை பெரும் சவாலாக மாறியுள்ளது.

அதேவேளை, குளத்தை அண்டிய பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, அவசர குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகம், கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் தேவையான நிவாரண நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

