ஒரே இரவில் கிண்ணியாவில் எட்டு பேர் கைது..! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள், அவற்றின் சாரதிகள் மற்றும் அனுமதியின்றி கடல் சிப்பிகளை கடத்திச் சென்ற ஒருவர் உட்பட எட்டு பேரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை நேற்று(25.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுடன் சாரதிகள் கைது
இதன்போது, உப்பாறு பகுதியில் எந்தவித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 உழவு இயந்திரங்களும், 4 டிப்பர் வாகனங்களும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், அந்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்று(25) கிண்ணியா - சூரங்கள் பகுதியில் பொலிஸார் நடத்திய மற்றுமொரு சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் களஞ்சியசாலைக்குக் கடத்திச் செல்லப்பட்ட கடல் சிப்பிகள் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில், தலா 50 கிலோகிராம் எடை கொண்ட 70 சிப்பி மூடைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட வாகனங்களின் சாரதிகளையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்டப் பூர்வ ஏற்பாடுகளை கிண்ணியா பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிர் மாய்ப்பு - செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!