முட்டை, கோழி இறைச்சி,பாலுக்கு நிலவும் பற்றாக்குறை! அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின், அடுத்த வருடம் இலங்கை பாரிய போசாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது உள்ளூர் சந்தையில் பால், முட்டை மற்றும் கோழி உற்பத்தியில் முறிவு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், கறி கோழி 12.1 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கால்நடைத் தீவனங்களான மக்காச்சோளம், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான உள்ளீடுகள் மற்றும் எரிபொருள் போன்ற பிற பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக கால்நடைத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விவசாய நடவடிக்கைகளை தொடரவும் வீழ்ச்சியை தவிர்க்கவும் 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்று உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.