38 ரூபாவாக குறைக்கப்படும் முட்டையின் விலை! வர்த்தக அமைச்சர் தகவல்
இன்னும் ஒரு வாரமளவில் 38 ரூபா வரை முட்டையின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முட்டை இறக்குமதி தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். நாட்டிற்கு தினந்தோறும் தேவைப்படும் முட்டைகளில் தேசிய உற்பத்தியிலிருந்து கொள்வனவு செய்த போதும் மூன்று லட்சம் முட்டைகளுக்கான குறைபாடு காணப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை
அந்த வகையில் நூற்றுக்கு முப்பது வீதமான குறைபாடு காணப்படுகிறது. நூற்றுக்கு ஐந்து வீதம் அல்லது பத்து வீத குறைபாடு என்றால் எம்மால் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். எனினும் 30 வீதம் என்பது இப்போதைக்கு எம்மால் நிவர்த்தி செய்து கொள்ள முடியாத காரணத்தாலேயே நாம் வெளிநாடுகளிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய தீர்மானித்தோம்.
அதேபோன்று நாட்டுக்கு போதுமான அளவில் முட்டையை உற்பத்தி செய்வதற்கு எமக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தொடர்பில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய அமைச்சுக்களோடு நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். எனினும் அடுத்த வருடம் நடுப்பகுதி வரை அவ்வாறு முழுமையான தேவையை நிவர்த்தி செய்ய முடியாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முட்டைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய உற்பத்தியாளர்கள் நான்கு பேரே உள்ளனர். அவர்களே பாரிய முட்டை உற்பத்தியாளர்கள். அவர்களே முட்டை வர்த்தகத்தில் பெரும் அழுத்தங்களை மேற்கொள்கின்றனர்.
நாம் தற்போது சதொச மற்றும் ஏனைய வர்த்தக சந்தைகளில் 35 ரூபாவுக்கு முட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் போது தேசிய உற்பத்தியாளர்களும் சிறு விலைக் குறைப்பை கடந்த வாரங்களில் மேற்கொண்டனர்.
65 ரூபா வரை சென்ற முட்டையின் விலை 50 ரூபா வரை குறைக்கப்பட்டது. சில இடங்களில் 44 ரூபாவுக்கும் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு வாரமளவில் 38 ரூபா வரை அதன் சில்லறை விலை குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |