முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்படுமா! வெளியாகியுள்ள தகவல்
முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் வர்த்தகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வர்த்தக அமைச்சருக்கும், வியாபாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்றைய தினம்(28.09.2022) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வியாபாரிகளின் கோரிக்கை
இந்த கலந்துரையாடலின் போதே வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி முட்டைக்கான நியாயமான விலையை வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளது.
தீர்மானங்கள்
இதன்போது முட்டை உற்பத்திக்கான உண்மையான செலவீனங்களை கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முட்டை உற்பத்தி
இந்நிலையில் முட்டை ஒன்றின் விலை 75 ரூபா வரை உயரக்கூடும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் தெரிவித்திருந்தார்.
மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தியை முன்னெடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 48 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப முட்டைகளை கட்டுப்பாட்டு விலையில் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடை உற்பத்தி பிரிவு தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.