முட்டையின் விலை மேலும் பல ரூபாவினால் அதிகரிக்கும் அபாயம்
முட்டை ஒன்றின் விலை 75 ரூபா வரை உயரக்கூடும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தியை முன்னெடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 48 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப முட்டைகளை கட்டுப்பாட்டு விலையில் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடை உற்பத்தி பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முட்டை உற்பத்தி
சந்தையில் ஒரு முட்டையை 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய, பண்ணையில் இருந்து வரும் முட்டைக்கு குறைந்தபட்சம் 36 ரூபாய் வழங்க வேண்டும்.
ஆனால் கால்நடை தீவனம், தண்ணீர், மின்சாரம் மற்றும் தொழிலாளர் கட்டணம் அதிகரித்துள்ளதால், 48 ரூபாய் வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை கூட இறைச்சிக்காக விற்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முட்டை தொழில் பாரியளவு வீழ்ச்சியடைந்து வருவதனால் சந்தையில் கிடைக்கும் முட்டையின் அளவு குறையும். இதன் காரணமாக முட்டை விலை நிச்சயம் உயரும். கால்நடை தீவனத்திற்கான பொருளாக சோளம் பயன்படுத்தப்படுகின்றது.
இறக்குமதி தடை
கடந்த காலங்களில் மக்காச்சோள இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து இரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு, மக்காச்சோளத்தின் விலை அதிகரித்துள்ளது.
சோளத்திற்குப் பதிலாக அரிசியை பயன்படுத்த முடியும் என்றாலும், கால்நடைத் தீவனமாக அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து வர்த்தக அமைச்சு வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
சட்டங்களைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. தனிப்பட்ட முடிவுகளை எடுக்காமல் அனைத்து நிறுவனங்களும் கூட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் மேலும் தெரிவித்துள்ளார்.