காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் யாழில் இறுதி நாளாக வாக்குமூலம் பதிவு
காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21.08.2026) இறுதிநாளாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர்.

விசாரணை
வாக்குமூலம் பெறும் நடவடிக்கையின்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர், வயது, காணாமலாக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் மற்றும் அது தொடர்பான ஏனைய முக்கிய தகவல்கள் குறித்து உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதன்போது நீண்டகாலமாக தமது உறவுகளின் நிலை தொடர்பில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



