பல்லேகல சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சி: மரண தண்டனை கைதிகள் இடமாற்றம்!
பல்லேகல தும்பர சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மரண தண்டனை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் கழிப்பறையிலுள்ள கம்பிகளை அறுத்துத் தப்பிச் செல்ல முயன்றனர் என குறித்த கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 கைதிகள் வெலிக்கடை மற்றும் அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டக் கைதிகள் தங்கியிருந்த அறைக்குட்பட்ட கழிப்பறையின் இரும்புக் கம்பிகள் சில அறுக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள், இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைகளின் போதே குறித்த கம்பிகளை அறுத்த சம்பவத்துடன் இந்த 6 கைதிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 6 கைதிகளில் நால்வர் வெலிக்கடை சிறைச்சாலைக்கும், ஏனைய இருவர் அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கும் உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.