பாடசாலை அருகே மதுபானசாலை - மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அதிபர் குற்றச்சாட்டு
புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்தி, பாதுகாப்பான கல்விச் சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புங்குடுதீவில் மூன்று பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை அமைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும், பாடசாலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
மதுபோதைக்கு பழக்கப்பட்ட குடும்பங்கள்
மது போதைக்கு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகின்றது, சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தராத நிலையும் இருக்கின்றது.

ஒரு பிள்ளையின் கல்விக்கான சாதகமான சூழல் முதலில் வீட்டிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும், பல குடும்பங்களில் அந்தச் சூழல் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் தீவகப் பகுதிகளிலும் உணரப்படுவதாகத் தெரிவித்த அவர், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் விசேட கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு பாதுகாப்பானதும் கல்விக்கு உகந்ததுமான சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.