32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை முதல் 7500 ரூபா நிவாரண உதவி
பொருளாதார ரீதியாக கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் 32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ள நிதியுதவி
பொருளாதார வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி செயற்பட்டு வருகிறது.
பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக ஜூலை மாதம் முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு பொருளாதார நிவாரணமாக வழங்குவதற்கு உலக வங்கி 200 மில்லியன் டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர்களையும் வழங்கியுள்ளன.
சமுர்த்தி உதவிகளை பெறும் குடும்பங்களுக்கு மேலதிகமாக ஒரு மில்லியன் குடும்பங்கள்
இதனடிப்படையில் இலங்கையில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 1.8 குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு, நோயாளர்களுக்கான கொடுப்பனவு உட்பட கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களுக்கு மேலதிகமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 1 மில்லியன் குடும்பங்கள் உள்ளடங்கும் வகையில், 32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் இந்த நிவாரணம் வழங்கப்படும்.
சமுர்த்தி உள்ளிட்ட உதவிகளை பெறும் குடும்பங்கள் பெற்று வரும் கொடுப்பனவுகளை 7 ஆயிரத்து 500 ரூபாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறான நிவாரண உதவிகளை பெறாத குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாவை அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அமைச்சர் பத்திரன தெரிவித்துள்ளார்.