பொருளாதார கொலையாளிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர் - சாணக்கியன் (VIDEO)
நாட்டின் பொருளாதாரத்தை அழித்த பின்னர் வெளிநாடுகளுக்கு அங்கு தங்கியிருந்த பொருளாதார கொலையாளிகள் அனைவரும் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணயக்கியன் ராசபுத்திரன் ராசமாணிக்கம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பளிப்பது, பொருளாதார கொலையாளிகளே பொருளாதார கொலை பற்றி நூல்களை எழுதுவது போன்ற நகைப்புக்குரிய விடயங்கள் நடக்கின்றன.
வழக்குகளை முடித்துக்கொண்டு தப்பியோடிய பொருளாதார கொலையாளிகள்
2002 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ராஜபக்ச அணியினர் மேற்கொண்ட கொள்ளையடிப்புகளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வென்று சமாளித்துக்கொண்டனர்.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடந்த கொள்ளைகள் சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை வழக்குகள் தொடரப்பட்டன.
இதன் பின்னர் தமது குடும்பத்தினர், நண்பர்களுக்கு பெரிய அழிவு ஏற்பட போகிறது என்பதை அறிந்து ஏமாற்று வேலைகளை செய்து, நாட்டை தீயிட்டு, ஈஸ்டர் தாக்குதலை நடக்க செய்து, 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.
2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது என்பதை அறிந்து, தமது கையில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தாம் உட்பட தமக்கு நெருக்கமானவர்களின் வழக்குகளை முடித்துக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றனர்.
நாட்டை விட்டு சென்ற பொருளாதார கொலையாளிகள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு வந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை கொண்ட கோட்டாபய ராஜபக்சவும் ஹம்பாந்தோட்டை சென்றிருந்ததை நான் பார்த்தேன்.
பொருளாதார கொலையாளி பொருளாதார கொலை தொடர்பான நூலை எழுதுகிறார்
இதன் பின்னர் அடுத்த பொருளாதார கொலையாளி பசில் ராஜபக்ச அண்மையில் விமான நிலையத்தின் ஊடாக வந்திருப்பதை பார்த்தேன். ராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கமின்றி அவரை வரவேற்க சென்றிருந்தனர்.
பொருளாதார கொலையாளிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தப்பிச் செல்லும் போது செல்ல இடமளிக்காத குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் பொருளாதார கொலையாளி இலங்கைக்கு வரும் போது செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றது.
மற்றைய பொருளாதார கொலையாளி கப்ரால் நூல் ஒன்றை எழுதியுள்ளார். பொருளாதார கொலையாளியே பொருளாதார கொலை தொடர்பான நூலை எழுதியுள்ளார். இப்படி நகைப்புரியதாக நாடு மாறியுள்ளது எனவும் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.