பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்:ரணில் யோசனை
நாடு எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவாக மீள வேண்டுமாயின் கடுமையான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்க நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்படி செய்யவில்லை என்றால், முதலாவது ஆண்டு எண்ணிப் பார்க்காத வகையில் மிகவும் சிரமமான வருடமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது வருடத்தில் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை சம்பந்தமாக வாத விவாதங்களை செய்து, காலம் தாழ்த்திக்கொண்டிருக்காமல், எடுக்க வேண்டிய முடிவுகளை மிக விரைவில் எடுக்க வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை தற்போதுள்ள முறைகள் மூலம் முற்றாக கட்டியெழுப்ப முடியாது.
இதற்கு தீர்வாக ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட போட்டி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை தற்போதே எடுக்க வேண்டும்.
1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் நிதியமைச்சர் ரொனி டி மெல் ஆகியோர் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் டொலருக்கு நிகராக ரூபாயை மிதக்க விட்ட போது, அது இரண்டு மடங்காக அதிகரித்து எனினும் மக்களிடம் பண புழக்கம் அதிகரித்தது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நாட்டின் அரசியல் துறையில் ரணில் விக்ரமசிங்க தொடர்பான எப்படி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் எப்படியான தோல்விகளை சந்தித்தாலும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான புரிதலும் அளவீடும் அவரிடமே இருக்கின்றது என்பதை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக நாடு எதிர்நோக்கி இருக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதில் இருந்து மீள்வது தொடர்பாக யோசனைகளை முன்வைத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



