கடும் பொருளாதார நெருக்கடி! கால்நடை வைத்தியர் சங்கத்தினர் பெரும் பாதிப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் கால்நடை வைத்தியர் சங்கத்தினர் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் சங்கத்தினால் இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிமித்தம் பண்ணையாளர்களிற்கான கால்நடை வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.
அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் உள்ளடக்கப்படாமை
நாடு முழுவதும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு பட்டினிச்சாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இத்தருணத்தில் மக்களின் உணவுத்தேவையை கணிசமானளவு பூர்த்தி செய்யக்கூடிய கால்நடை உற்பத்தி பொருட்களான முட்டை, பால். விலங்கு இறைச்சிகளின் உற்பத்தியை உறுதிசெய்வதற்கு அத்தியாவசியமான கால்நடை உற்பத்தி சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெறாமல் போனது நாட்டில் உணவுப்பஞ்சத்தை மேலும் அதிகரிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
பண்ணையாளர்களின் ஜீவனோபாய தொழிலாக தற்போது வரை பண்ணையாளர்களிற்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற கால்நடை வளர்ப்பிற்குரிய வைத்திய சேவைகள் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் இதர விரிவாக்கல் சேவைகளிற்கு பொறுப்பான கால்நடை வைத்தியர்களிற்கும் கால்நடை வைத்திய அலுவலக உத்தியோகத்தர்களிற்கும், அலுவலக வாகனங்களிற்கும் எரிபொருளினை வழங்குவதற்கு எதுவித ஏற்பாடுகளும் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றமை வரும்காலத்தில் பண்ணையாளர்களிற்கு சேவைகளினை வழங்க முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இந்நிலையில் வடக்குமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம், கால்நடை வைத்தியர்கள் வரும் காலத்தில் எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மாத்திரம் கடமைகளிற்கு சமூகமளிப்பதாக தீர்மானித்துள்ளது.
அத்துடன் எமது சேவைகளினை பெற
முடியாத பண்ணையாளர்களிற்கு இக்காலத்தில் ஏற்படுகின்ற எல்லாவித
அசௌகரியங்களிற்கும் கால்நடை உயிரிழப்பு மற்றும் உற்பத்தி இழப்புக்களிற்கும்
ஏனைய கால்நடை வளர்ப்பு தொடர்பான பொருளாதார இழப்புக்களிற்கும் வடக்கு மாகாண
நிர்வாக கட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும், என்பதனை பொதுமக்களிற்கும் கால்நடை
வளர்ப்பில் ஈடுபடும் அனைத்து பண்ணையாளர்களிற்கும் மன வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கின்றோம் என கூறப்பட்டுள்ளது.