பிரித்தானிய மக்களுக்கு மகிழச்சியான தகவல் - 15 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான நிவாரண தொகுப்பு அறிவிப்பு
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், நிதி அமைச்சர் ரிஷி சுனக் 15 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வாழ்க்கைச் செலவு நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளார்.
இதன்படி பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த அக்டோபரில் 400 பவுண்ட்ஸ் எரிசக்தி கட்டணத் தள்ளுபடியைப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுமார் எட்டு மில்லியன் ஏழ்மையான குடும்பங்கள் வாழ்க்கைச் செலவுக்கு உதவ 650 பவுண்ட்ஸ் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அதிகரித்து வரும் விலைகளை சமாளிக்கும் புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என நிதி அமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள பணவீக்கம்
பிரித்தானியாவில் 40 ஆண்டுகளின் பின்னர் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஒக்டோபர் முதல் எரிசக்தி கட்டணங்கள் மேலும் 800 பவுண்டுகள் வரை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும் என இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் 15 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வாழ்க்கைச் செலவு நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தம் பேசிய அவர்,
"தற்போதைய நிலையில் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை நாங்கள் அறிவோம். பிரித்தானியா மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்குவோம் என கூறியுள்ளார். மேலும், பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், குறைப்பதற்கும் எங்களிடம் உறுதிப்பாடு உள்ளது.
இந்த கடினமான நேரத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் குறைந்த நிலையில் உள்ளவர்களுக்குத் தேவையான உதவிப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
15 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வாழ்க்கைச் செலவு நிவாரணத் தொகுப்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊனமுற்றோருக்கு அதிக இலக்கு உதவியை வழங்கும்.
சமீபத்திய மாதங்களில் உயர்ந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் லாபத்தின் மீதான 25 விகித windfall வரியால் செலவு ஓரளவு ஈடுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.